×

கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 5 ஊராட்சிகளுக்கு மீண்டும் குடிநீர் விநியோகம் துவக்கம்

பவானி, ஏப். 30: வரதநல்லூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 5 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்களுக்கு மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கதவணை நீர் மின் திட்டத்தின் நீர்த்தேக்க பகுதியில் வரதநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையம் உள்ளது. கதவணையில் தண்ணீர் தேக்கப்படும்போது இங்கு நீரேற்றம் செய்வது மிக எளிதாக இருக்கும். தற்போது ஊராட்சிக்கோட்டை கதவணை நீர்மின் நிலைய பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டதால் கடந்த 20-ம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் முற்றிலும் திறந்து விடப்பட்டது. காவிரியில் தண்ணீர் வெளியேறியதால் நீரேற்ற குழாய்களுக்கு தண்ணீர் எட்டவில்லை. இதனால், நீரேற்றம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டது. நீரேற்றும் பகுதியில் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், காவிரியில் ஆழமான, தண்ணீர் ஓடும் பகுதிக்கு குழாய் நீட்டிப்பு செய்யப்பட்டு, நீரேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பணிகளை, தொட்டிபாளையம் ஊராட்சித் தலைவர் எம்.செல்வராஜ், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் குடிநீர் விநியோகம் நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், வரதநல்லூர், சன்னியாசிபட்டி, தொட்டிபாளையம், குருப்பநாயக்கன்பாளையம் மற்றும் மயிலம்பாடி ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் சீரானது. கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

The post கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 5 ஊராட்சிகளுக்கு மீண்டும் குடிநீர் விநியோகம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Varadanallur ,Panchayat Kathavani ,Cauvery River ,Dinakaran ,
× RELATED பவானி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி